Friday 1 August 2014

பெரிதினும் பெரிது கேள்------ஒரு நிமிடக் கதை

சும்மா அங்கே போய் பே...ப்பேன்னு நிக்காதீங்க, சட்டு புட்டுன்னு கேளுங்க, வீடு கட்டுறேன் கடன் ஒரு முப்பது லட்சம் வேணும்னு கேளுங்க என்று சொன்னாள் நித்யா.

என்னடி நமக்கெதுக்கு முப்பது லட்சம்?, வீட முடிக்க நாலு லட்சம் இருந்தா போறுமே. ஏற்கெனவே தான் முக்கால் வீட்டை முடிச்சிட்டோமே. முப்பது லட்சத்தை எப்படி திரும்பக் கொடுக்கிறதாம்? என்றான் ராகவன்.

திரும்பக் கொடுக்கிறது பற்றி இப்ப என்ன கவலை?

இல்லை நித்யா, நமக்கு நாலு லட்சம் இருந்தா தரை போட்டு, பூச்சு வேலை முடிச்சு, வெள்ளையடிச்சு வர ஐப்பசி மாசமே கிருகப்பிரவேசம் செய்திடலாம். இந்த வீட்டுக்காரனோட மாரடிச்சு மாளல, வருஷா  வருஷம் வாடகை ஏத்திடுறான், கட்டுபடியாக மாட்டேங்குது. அதற்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட ஓரளவிற்கு வீடு முடிக்கிறளவுக்கு வந்துட்டோம். நமக்குன்னு ஒரு சொந்த வீடு வேண்டும்.

ஆமாம் தரை போட்டு வெள்ளையடிச்ச மட்டும் போதுமா, ஏ.சி, பர்னிச்சர் லொட்டு லொசுக்குன்னு நமக்கு ஆயிரம் செலவு இருக்கு என்றாள் நித்யா.

ஏண்டி அந்த ஆடம்பரமெல்லாம் நமக்கு எதுக்கு? முதலில் ஒரு சொந்த வீட்டுக்கு இங்க முழி பிதுங்கறது? பி.எப், ஹௌசிங் லோனுனு எல்லாத்திலேயும் கை வச்சாச்சு.

நான் சொல்லுறத கேளுங்க, கடன் கேக்கறதுலையும் ஒரு கௌரவம் வேணும், நாலு லட்சம் கேட்டா உங்க நிலைமை ரொம்ப மோசம்னு கடன் கொடுக்க மாட்டாங்க, அதுவும் உங்க உறவினர் இருக்காரே அவங்க நாயை அவுத்து விட்டாலும் விடுவாங்க.

சீ சீ அப்படியெல்லாம் செய்யமாட்டார்.

ஆமாம் போன வருஷம் ராகுலிற்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு போய் நாம் ரெண்டு பேரும்தான் போய் கேட்டோம்  அப்ப என்ன சொன்னாரு?  நான் இப்போ பிசி அப்படின்னு தட்டி கழிச்சார். அதே அப்போ வந்த உங்க தூரத்து உறவினருக்கு நம்ம எதிரிலேயே பத்து லட்சத்திற்கு செக் கொடுத்தாரு. உங்கள ஒரு மனுஷனாவே அவரு மதிக்கல.

அது அவங்களுக்குள்ள என்ன டீலிங்னு நமக்கு தெரியாது.

உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுங்க, அவர் மனைவி என்கிட்டே சொல்லிட்டாங்க, அதனால தான் சொல்லுறேன் முப்பதாவது கேளுங்கன்னு.

அதுக்குன்னு முப்பது லட்சமா? எப்படி திரும்பக் கொடுக்கிறதாம்? என்றான் ராகவன் கவலையோடு.

திரும்ப கொடுக்கிறதா?!!! அதை அப்புறம் பார்ப்போம், நீங்க கேட்டுத்தான் பாருங்களேன் அப்புறம் நான் சொல்றது புரியும். பெரிய பெரிய புத்தகமெல்லாம் படிக்கிறீங்க, இன்னும் இந்த சின்ன விஷயம் கூட தெரியல? "பெரிதினும் பெரிது கேள்"  ன்னு பாரதியே சொல்லியிருக்கிறார் என்றாள் நித்யா விடாப்பிடியாக.

அதுக்கு ஏன் பாரதி எல்லாம் இழுக்கிற? அவர் கடனுக்கு சொல்லலை.

அடப் போங்க சும்மா விதண்டாவாதம் செஞ்சுண்டு, இப்ப எல்லாம் கடன் கேட்க ஒரு கௌரவம் வேணும். ஸ்கூட்டரில் போய் கடன் கேட்டா உங்க உறவினர் கொடுக்க மாட்டார், உங்க நண்பரின் காரை எடுத்துகொண்டு போங்க ஒரு கெத்தா இருக்கும்.

உண்மையாதான் சொல்லுறியா? என்று தன் நண்பனிடம் கார் கேட்கக் கிளம்பினான் ராகவன்.

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

UmayalGayathri said...

கடன் வாங்கினா கெளரவக் குறைச்சல் அந்தக்காலம். தேவைனா குறைவா வாங்கி விரைவா கொடுப்பாங்கன்னு அம்மா சொல்லுவாங்க..
இப்போ எதிர்விதமாக இருக்கிறது. மனிதர்களின் மனம் எங்கோ..எப்படியோ போகிறது.
நல்ல நிமிடக்கதை.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோதரி.

KILLERGEE Devakottai said...

கடன் கேட்கப்போறதுக்கு கார் கடனா ? குடும்பம் விளங்கிடும் நித்யா மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சா ? நித்தம் நித்தம் பிச்சைதான்.
அருமை நண்பரே...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மனித வாழ்க்கையின் யதார்த்ததை மிக அருமையாக வெளிக்காட்டியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

கடன் வாங்கவும் கவுரவம் பார்க்கும் இன்றைய மனப்போக்கை அருமையாக சித்தரித்தது கதை! அருமை!

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

கவிதை போட்டியா? நன்றி, வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Unknown said...

பாரதியார் இருந்திருந்தால் நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பார் !
த ம 3

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

விமல் ராஜ் said...

நல்ல கதை.... தொடர்ந்து இது போல எழுதுங்கள்....

கும்மாச்சி said...

நன்றி விமல்ராஜ்

வருண் said...

"தல கிரி", நம் பிரச்சினைக்கு யார் காரணம்னு ஒரு பதிவு போட்டாரு..

http://www.giriblog.com/2014/07/who-is-the-reason-for-our-problems.html

அதில் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் பெண்களுடைய பொறுப்பின்மைனு ஒரு பின்னூட்டம் போட்டேன்..

அது இந்தக் கதைக்கு சரியாக வரும்போல இருக்கு..

***அந்நிய முதலீடு என்று ஏகப்பட்டதை இறக்கி விட்டார்கள். மக்களும் அவர்கள் கொடுக்கும் கவர்ச்சி விளம்பரத்தில் மயங்கி தங்களால் முடியவில்லை என்றாலும் EMI அப்படி இப்படி என்று அந்தப் பொருளால் பயனுள்ளதோ இல்லையோ வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். எந்த மாலுக்குச் சென்றாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை தண்ணீராக (இதுவே தற்போது விலையுயர்ந்ததாகி விட்டது, இனி இந்த உதாரணம் பயன்படாது) செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். பார்க்கவே திகிலாக இருக்கிறது!***

தல: இதில் பொறுப்பில்லாமல் இருக்கது பெண்கள்தான் என்கிற உண்மையை நீங்க சொல்லாமல் மறைத்து விட்டீர்கள்.

இதில், அம்மா, அக்கா, தங்கை, காதலி, மனைவி எல்லோருமே அடங்குவார்கள்.

கருணாநிதி தன் மனைவியை சாய்பாபவை வணங்குவதை தடுக்க முடியவில்லை என்பதை கேலி பண்ணுவதை விட, தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்து, அவரை தான் சொல்லுவதுபோல்தான் கேக்கணும் என்று அடிமையாக் ட்ரீட் பண்ணவில்லைனு சிந்திக்க கத்துக்கொள்ளணும்.

அதேபோல் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது. சம்பாரிக்கும் பெண்களை கேட்கவே வேண்டாம்.

நான் பெண்களைத்தான் இந்த விசயத்தில் 90% குறை சொல்லுவேன். ஆண்கள் இந்த விசயத்தில் ஓரளவுக்கு “வைஸ்”தான். ஆனால் பெண்கள் மனங்கோணாமல் நடந்து கொள்ளுகிறேன் என்று மனதுக்குள் கவலைப் பட்டுக்கொண்டே இந்த முட்டாள்த்தனமான ஆடம்பரத்தை கட்டுப் படுத்த முடியாமல் பரிதவிக்கிறார்கள்.

பெண் சுதந்திரம்னா, பார்லர் போறது, ரெஸ்டாரண்ட்ல சாப்பிடுறது, சினிமா பார்க்கிறது, மாலில்போயி கண்டதையும் அள்ளிக்கொண்டு வருவதுணு ஆயிப்போச்சு. பொறுப்பில்லாமல் சிந்திக்காமல், பண வேல்யு தெரியாமல் இப்படி ஊதாரியா இருப்பதுதான் பெண் சுதந்திரமா?

ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால். இப்போ அழிந்து கொண்டிருக்கிறோம், பொறுப்பில்லாத நவ நாகரீக தாய்க்குலங்களால்!

-----------

ஆனா ஒண்ணு கிரிக்கு நான் கலைஞரை நியாயப்படுத்தியது பிடிக்கவில்லை. அதேபோல் உங்களுக்கும் பிடிக்காதுதான். என்ன ஒரு ஒற்றுமை பாருங்க!! :)))
--------------------
இந்தப் பின்னூட்டத்தை கிரி தளத்தில்ப் படிச்சுட்டு லேடீஸ் எல்லாம் என் மேலே கொலை வெறியா அலையிறாளாம் என்பது உங்களுக்கு கூடுதல் செய்ய்தி

------------

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணா.....
இப்பொழுது கடன் கேட்பது கூட உயர்வான விசயமாக நினைக்கிறார்கள் போல.....

கும்மாச்சி said...

வருன்ராஜ் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

காசிராஜலிங்கம் ஐயா வருகைக்கு நன்றி.

sarathy said...

Correct analysis. Take as much for the prestige to prevail.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.