Friday 30 October 2015

ரசம் சாதமும் ரசகுல்லாவும் (1)


என் படிப்பெல்லாம் அவ்வளவு சிலாக்கியமில்லை. எப்படியோ ஒவ்வொரு வகுப்பிலும் பெஞ்சை தேய்த்து பள்ளிப்படிப்பை முடித்தேன். நான் வாங்கிய மதிப்பெண்களுக்கு எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காது. இருந்தாலும் ஏதோ ஒரு தொழிற்கல்லூரியில் சேர்ந்து தோழர்களுடன் கடலை போட்டு ஒரு டிப்ளமா வாங்கிவிட்டேன். வாங்கிய  கையோடு அப்பொழுதுதான் நகரத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் சேர்ந்தாகிவிட்டது. முதல் இரண்டு வருடம் அப்ரசண்டீ, கையில் வரும் உதவித்தொகையில் வீட்டில் கொடுத்தது போக மீதி இருந்தவையில் வாரவிடுமுறை நாட்களில் சினிமா, பீச் என்று நண்பர்களுடன் சுற்றுவது என்று வாழ்க்கை ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது தேஷ்ணாவை அன்று என் வண்டியில் அவள் வீட்டில் விடும் வரை. இது ஒன்றும் புதியதல்ல நிறைய முறை அவளை டிராப் செய்திருக்கிறேன் ஆனால் வீடு வரை அல்ல அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என்று இறங்கிவிடுவாள்.

தேஷ்ணாவை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்பு எனது ஷிப்ட் சூபர்வைசர் பற்றியும், நான் மோட்டார் பைக் வாங்கிய கதையையும் சொல்லவேண்டும். "அப்ரசண்டீ" முடிந்தவுடன் அதே கம்பெனியில் வேலையில் நிரந்தரமாக்கப்பட்டேன். இப்பொழுது சம்பளம்  பேசிக், ஹவுஸ் ரெண்ட், டிஏ என்கிற பஞ்சப்படி, ஷிஃப்ட் அலவன்ஸ் என்று பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றம். கூடவே வட்டி இல்லாமல் இரு சக்கர வாகனம் வாங்க கடனும் கொடுத்தார்கள். ஆனால் அதில் ஒரு பிரச்சினை. வண்டி விலையில் முக்கால் பங்குதான் கொடுப்பார்கள், அதுவும் நாம் வண்டி வாங்கி அதற்கான ஆர் சி புக்கை காண்பித்தால் நமக்கு பணம் வந்து சேரும். ஆதலால் முதலில் முழுப்பணமும் புரட்டியாக வேண்டும். அப்பாவிடம் கேட்டால் என்னிடம் பணம் இல்லை, மேலும் இப்பொழுது வண்டி எதற்கு, நிம்மதியாக ஷிப்ட் பஸ்ஸில் போகவேண்டியதுதானே என்று கைவிரித்து விட்டார்.

இருந்தாலும் நண்பர்களிடமும் அவர்களுக்கு தெரிந்த கந்துவட்டிகளிடமும் கடன் வாங்கி வண்டி வாங்கியாகிவிட்டது. வண்டியில் தொழிற்சாலை சென்று வந்து கொண்டிருந்தேன். ஷிப்ட் வேலை என்பது ஒரு கொடுமையான விஷயம். எல்லோரும்  ஆபீஸ் சென்று வரும் வேலையில் நாம் நைட் ஷிப்ட் செல்லவேண்டும். மேலும் விடுமுறையெல்லாம் நமக்கு மாறி மாறி வரும். வார வாரம் மாறும். ஒரு வாரம் திங்கள் , செவ்வாய் என்றிருக்கும் மற்றுமொரு வாரம் புதன், வியாழன் என்றிருக்கும். சனி ஞாயிறு எல்லாம் வந்தாலும் இரவு வேலை பார்த்த அலுப்பிலேயே சனிக்கிழமை போய் ஞாயிறு முடிவதற்குள் காலை ஷிப்ட் என்று நான்கு மணிக்கே கிளம்ப வேண்டிய கொடுமை.

என்னதான் ஷிப்ட் என்று சென்று கொண்டிருந்தாலும் தொழிற்சாலையில் வேலைக்கு நடுவே நண்பர்களுடன் அரட்டை சூப்பர்வைசரை ஓட்டுவது என்று நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. சூபர்வைசர் "முகர்ஜி" ஒரு பெங்காலி. அவர் இப்பொழுதுதான் தமிழ்நாட்டில் வந்து பொருப்பேற்றுக்கொண்டதால் தமிழ் ஒரு மாதிரி குன்சாவாக பேசுவார். என்ன பிரச்சினை என்றால் மனிதர்களை "ஏய் நீ இன்னா சாப்புடுது, கண்ணன் வேலைக்கு வர்து, ரோவி (நான்தான்) நீ மேலே போகுது", என்று ஆடு, மாடு போல விளிப்பார். ஆனால் கம்ப்ரெஸ்சர், பம்ப்பு, பாய்லர் போன்றவற்றிற்கு அளவுக்கதிகமாக பாய்லர் ஓடுறாரா? கம்ப்ரெஸ்சர் சுத்துறாரா? என்று அம்மாவைக்கண்ட அமைச்சர்கள் போல குழைவார். பிரச்சினை அவரல்ல அவர் தமிழ்தான். இருந்தாலும் அவருக்கு எனது வேலை பிடிக்கும் வருடா வருடம் அப்ரைசலில் நன்றாக எழுதி டபிள் இன்கிரிமென்ட், போனஸ் என்று நன்றாகவே கவனித்துக்கொண்டார்.

நாம் தினமும் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு அலுப்புடன் வந்து சற்று தூங்கலாம் என்றால் என் தங்கை அவளது கல்லூரி தோழிகளுடன் அரட்டை அடித்துகொண்டிருப்பாள். நாம் தூங்க ஆரம்பித்து சற்று நேரத்திற்குள் எழுப்பி "டேய் ரவி ப்ளீஸ் என் பிரெண்ட்சை கொஞ்சம் ஸ்டேஷனில் டிராப் செய்கிறாயா" என்பாள்.

போடி சனியனே எனக்கு டயர்டா இருக்கு? என்றால் சீ பாவம்டா ரொம்பதூரம் ஸ்டேஷனுக்கு போகணும், நீ தண்டத்துக்கு தூங்கிக்கொண்டுதானே இருக்கே என்பாள்.

அவள் தொல்லை தாங்க முடியாது. அந்த சனியன்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு இடம் சொல்லும், ரேவதி பஸ் ஸ்டாண்டு என்றால் , ஜெனிப்பர் ஸ்டேஷன் என்று கெஞ்சும். பாவனா என்னை மார்கெட்டில் விடு அண்ணா என்று ஏறக்குறைய நம்மை ஆட்டோ டிரைவர் போல் ஆக்கிவிடும் என்ன அவர்கள் மாதிரி மீட்டர், மீட்டருக்கு மேல் காசு என்று வாங்க முடியாது. அப்படி எனக்கு பரிச்சியமானவள்தான் இந்த தேஷ்ணா.

அன்றும் அப்படித்தான் ரொம்ப தொந்தரவு செய்தாள். டேய் என் பிரண்டு தேஷ்ணாவை அவள் வீட்டில் விடவேண்டும் என்றாள்.

நானோ முடியவே முடியாது எனக்கே  கம்பெனியில் வேலை அதிகம், மேலும் இது அப்ரைசல் டைம் வேறு வழக்கத்தைவிட வேலை அதிகம் ஆளைவிடு அவளை வழக்கம்போல் பஸ் பிடித்து போக சொல்லு என்றேன்.

என்னடா லூசு இன்றைக்கு பஸ் ஸ்ட்ரைக் தெரியாதா? உனக்கு. இங்கு வரும்போது அவன் அண்ணா டிராப் செய்துவிட்டான், திரும்ப அவனால் வரமுடியாதாம் நீதான் டிராப் செய்யணும் என்றாள்.

அவளை கண்டபடி திட்டிக்கொண்டு தேஷ்ணாவை வேண்டா வெறுப்பாக வண்டியில் ஏற்றிக்கொண்டு  அவளது வீடு நோக்கி சென்றேன்.

-----------தொடரும்



Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Anonymous said...

Interesting start Boss.

Christo

”தளிர் சுரேஷ்” said...

சுவையான ஆரம்பம்! தொடர்கிறேன்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.