Wednesday 25 November 2015

யாரைக்கேட்டு பெய்தாய்?

தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவ மழை இந்த வருடம் வெளுத்து வாங்கிவிட்டது.......இதுவரையில்.......மற்றுமொரு தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு என வருணபகவான் ஏஜண்டு மைக்கைப் பிடித்து மண்டையாட்டி சொல்லிவிட்டார்.

சமீப காலமாக இணையத்தில் ஒரே மழை செய்திதான். பல பதிவுகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் நிலைமையை படம் பிடித்து போட்டிருந்தன. மூஞ்சிபுத்தகத்தில் மழை ஸ்டேடஸ் தான் முதலில் இடம் பிடித்து லைக்குகளை அள்ளி சென்றது.

சென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகள் நிரம்பி வழிந்தாலும் சென்னையின் தாகத்திற்கு அது ஒரு சோள பொறிதான். இதற்கு காரணங்கள் தேவையில்லை. அடுத்த வருடம் பருவமழை தவறினால் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தண்ணீர் லாரி பின்னாடி ஓட வேன்டியதுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம், இந்த இரண்டு வாரங்களில் சென்னை மூழ்கிய செய்திகளையும், அரசின் நிர்வாக செயலிழப்பையும் எதிர்கட்சி தொலைகாட்சிகள் மாறி மாறி காண்பித்து மூளை சலவை செய்துகொண்டிருந்தன. ஆளும் கட்சியோ அம்மா ஆணைப்படி பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி என்று மார்தட்டியது. புரட்சிதலைவி அம்மா நாமம் வாழ்க என்று கொசுறு விட மறக்க வில்லை.

ஆனால் உண்மை நிலை மழையினால் அவதிப்பட்ட மக்களுக்கு தெரியும். அதுவும் தாழ்வான இடங்களில் வீடு கட்டிய மக்கள் நிறையவே அவதிப்பட்டனர். ஒரு காலத்தில் உயர்வான இடம் என்று இருந்தாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒதுங்கியவர்கள் நிலைமையும் இதே கதிதான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விடாது பத்து மணிநேரம் பெய்த மழையில் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு மாலை ஐந்து மணிக்கு கிளம்பி மறுநாளில் விடியலில் வீடு வந்து சேர்ந்தவர்கள் நிலைமை மிகவும் மோசம்.

இரண்டு பிரதான கட்சிகளும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் தமிழகத்தை ஆண்டு ஒட்டு வங்கி அரசியலில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து பட்டா கொடுத்ததும், சிமண்டு வியாபாரத்தை கையிலெடுத்து தெருக்களை கான்க்ரீட் சாலைகளாக மாற்றியதும், மழைநீர் வடிகால்களை சரி வர அமைக்காததும், அமைத்த வடிகாலகளை சரிவர பராமரிக்காததும் இப்பொழுது பெய்த மழை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட்டது.


இருந்தாலும் இந்த சூழலிலும் ஓரளவிற்கு உழைத்த மின்சரவாழிய ஊழியர்களையோ, இல்லை தீயணைப்பு படை வீர்கள் செய்த சேவைகளையோ மருந்திற்கும் ஒரு ஊடகம் கூட பாராட்டவில்லை.

ஆனாலும் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இதையெல்லாம் சரிசெய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு இது மாதிரி ஒரு பேரிடர் ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும்.

மேலும் ஓட்டுப்போடும் மக்களின் நியாபக சக்தி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.இப்பொழுதிற்கு ஓட்டை அள்ள என்ன வழி?, எப்படி வருவாயை பெருக்கி இலவசங்கள் கொடுக்கலாம்?, எந்த திட்டம் அமைத்தால் சீக்கிரம் கல்லா கட்டலாம்? அதற்கு உண்டான வேலைகளும் ஆலோசனைகளும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரிஸ்ஸாவில் அடித்த ஹெலன் புயலின் பாதிப்பும் அவர்கள் எவ்வளவு விரைவில் இயல்பு வாழக்கைக்கு திரும்பினார்கள் என்பதெல்லாம் நமது "விலையில்லா" மக்களுக்கு தெரிய நியாயமில்லை.


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

KILLERGEE Devakottai said...

சரியானபடி அலசியுள்ளீர்கள் நண்பரே உண்மையான வார்த்தைகள் நமக்கு மறதி அதிகம் நான் ஆட்சிக்கு வந்தால் எனது தேர்தல் வாக்குறுதியில் முதலில் மறதி மாத்திரையை இலவசமாக வழங்குவதாக சொல்வேன்.
தமிழ் மணம் 3

மீரா செல்வக்குமார் said...

நல்ல மழை..
இப்படி ஒரு பதிவைத் தந்திருக்கிறது...

Unknown said...

"விலையில்லா மக்கள்" சரியாக சொன்னீர்கள்.

Unknown said...

"விலையில்லா" மக்களுக்கு தெரிய நியாயமில்லை.

நிஷா said...

அடுத்த தேர்தலில் இலவசமாக ஆளுக்கு ஒரு குடையும், படகும் கொடுத்தால் எல்லோரும் ஒட்டு போடுவார்கள் என கூட இப்ப ஐடியா தோன்றி இருக்கும்.

இச்சூழலிலும் தயங்காது பணி செய்த தீயணைப்பு வீரர்கள், மின்துறை ஊழியர்கள் மட்டுமல்ல இராணுவத்தினர்,போக்குவரத்து துறையினரையும் பாராட்டத்தான் வேண்டும். குற்றம் குறை தேடினால் அனைத்திலும் உண்டு. நாம் நிறைகளை பாராட்டுவோம்.

மழை, வெள்ள்ம், பாதிப்பு குறித்த நல்ல அலசல் பகிர்வுக்காக நன்றி.

நான் வலைப்பூவுக்கு புதிய வரவு
.ttp://alpsnisha.blogspot.ch/2015/11/blogpost_9.html
உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.