Saturday 28 November 2015

நல்ல காலம்

சதீஷ் அந்தப் பாடலை காதல் உணர்ச்சிக்கூட்டி பாடிக்கொண்டிருந்தான். இயக்குனர் அவனது குரலில் மயங்கி உருகிக்கொண்டிருந்தார். பகல் பன்னிரண்டு மணிக்கு தொடங்கிய ஒத்திகை ஒரு வழியாக முடிந்து, இப்பொழுதுதான் "டேக்"கிற்கு வந்திருக்கிறது. ரெக்கார்டிங் முடிய இரவு பன்னிரண்டு மணியாகிவிட்டது. சதீஷ் ரெக்கார்டிங் தியேட்டர் விட்டு வெளியே வந்தான்.

அண்ணே நீங்க உள்ளே இருக்கும் பொழுது வீட்டில அண்ணி அடிக்கடி போன்ல கூப்பிட்டாங்க, நான்தான் அண்ணே உள்ளே இருக்காரு வந்த வுடனே போன் பண்ணுவாருன்னு சொல்லியிருக்கேன், வீட்டுக்கு போன் பண்ணிடுங்கண்ணே  என்றான்.

என்னடா விஷயம் ஏதாவது பிரச்சனையா?.

பிரச்சனை இல்லண்ணே, அண்ணி உங்க கிட்ட  சொல்லியிருந்தாங்களாம், பிள்ளைங்க ஸ்கூலில் நாளைக்கு ஏதோ விசேஷமாம் ரெக்கார்டிங் முடிஞ்சவுடனே இங்கே தங்க வேண்டாம் ஊருக்கு வரசொல்லி நியாபகப்படுத்ததான் போன் பண்ணாங்க என்றான்.

சதீஷிற்கு நியாபகம் வந்தது, நாளை ஸ்கூலில் நிஷாவும், த்ரிஷாவும் நடனமாடுகிறார்கள், அவன்தான் பள்ளிக்கு கூட்டி செல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். மேலும் அவன் இது வரை அவர்கள் பள்ளிக்கூட விழாவில் கலந்து கொண்டதுமில்லை. குழந்தைகளுக்கு தங்களது தந்தை பிரபலப் பாடகர் என்று பெருமை.

சதீஷ் சரி வண்டியை எடு இப்போ கிளம்பினால்தான் சரியான நேரத்திற்கு ஊர் போகமுடியும் என்றான்.

அண்ணே இன்னொரு விஷயமண்ணே, மிருதுளா ரெண்டு முறை பண்ணிச்சு.

சதீஷிற்கு தெரியும் மிருதுளாவை பார்க்காமல் போகமுடியாது, ஏற்கனவே ரெக்கார்டிங் முடிந்தவுடன் போவதாகத்தான் இருந்தான், ஆனால் இவ்வளவு நேரம் ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை.

மிருதுளாவை கடந்த சிலமாதங்களாகத்தான் பழக்கம். ஒரு முறை ரெகார்டிங் முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது  சந்தித்தான். அதில் தொடங்கிய பழக்கம் ஒவ்வொரு முறை சென்னை வரும்பொழுதும் அவளுடன் தங்கிவிட்டு செல்வது பழக்கமாகிவிட்டது. பழக்கமென்பது இப்பொழுது சாதாரண வார்த்தை இப்பொழுத் அது அதற்குமேல் சென்று  அவன் சட்டையில் கைவிட்டு காசு எடுக்கும்வரை வந்துவிட்டது.

அவன் அவர்கள் வீட்டிற்கு போனவுடன் மிருதுளா அம்மா வாய் நிறைய வரவேற்பாள். அன்று அவனிற்காக புது சரக்கு ஓபன் செய்து கோழி, ஆடு என்று எல்லாம் தட்டில் மிதக்கும்.  சாப்பிட்டு முடித்தவுடன் சதீஷ் மேலும் இரண்டு மடக்கு குடித்தால்தான் அவனுக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

ஆனால்  மிருதுளா அம்மா " தம்பி காலைல  ஊருக்கு போவனும் இல்ல  மிருதுளா தம்பிய சீக்கிரம் கூட்டிட்டு ரூமுக்கு போ" என்று துரத்திவிடுவாள். சதீஷ் மனதிற்குள் அவள் உபசரிப்பை நினைத்து சிரித்துக்கொண்டான்.

சரிடா பாண்டி என்ன அவங்க வீட்டில விட்டுட்டு நீ ரெஸ்ட் எடுத்துக்கோ, காலைல நாலு மணிக்கு ஊருக்கு போவலாம் என்று கிளம்பினான்.

பாண்டி சதீஷை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு அவன் வேலையை பார்க்க கிளம்பினான்.

காலையில் நான்கு மணிக்கு பாண்டியை  செல் போனில் கூப்பிட்டு கிளம்பலாம் என்றான்.

வீட்டின் வெளியே வந்தால் பாண்டி கார் கதவை திறந்து வைத்துக்கொண்டு காலை வெளியே நீட்டி நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.பாண்டியை எழுப்பினான்.பாண்டி எழுந்து கண்களை கசக்கிக்கொண்டு வெளியே வந்தான்.

சதீஷிற்கு நிலைமை புரிந்துவிட்டது. பாண்டி கார் ஒட்டும் நிலையில் இல்லை. விடிவதற்குள் ஊருக்குப் போகவேண்டும். சதீஷ் தானே வண்டிய எடுக்க முடிவு செய்தான். பாண்டிய பின் சீட்டில் தூங்க சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். இன்னும் விடியவில்லை. நெடுஞ்சாலையை நெருங்கும் பொழுது லாரிகளின் டிராபிக் அதிகமாக இருந்தது. ஒரு வழியாக அவற்றையெல்லாம் கடந்து வேகம் பிடித்தான். ஒரு ஐம்பது கிலோமீட்டர் சென்றிருப்பான். அடுத்த ஜங்கஷனில்  ஒரு நான்கு ஐந்து போலீஸ் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.

அந்த இன்ஸ்பெக்டர் சதீஷின்  வண்டியை நிறுத்தினார். பாண்டி வண்டி வேகம் குறைவதை கண்டு முழித்துக்கொண்டான், காரின் வெளியே பார்த்தபொழுது அவனுக்கு நிலைமை புரிந்தது.

அண்ணே நீங்க இருங்க அண்ணே நான் அவரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று இன்ஸ்பெக்டரை நெருங்கினான்.

அவர் சதீஷையும் இறங்கி வெளியே வர சொன்னார். சதீஷிற்கு நிலைமையின் தீவிரம்  புரிந்தது. போனமுறை இதே  இடத்தில் நிறுத்திய இன்ஸ்பெக்டர் சதீஷை அடையாளம் கண்டுகொண்டு " சார் நீங்க அந்தப் பாடகர்தானே" சரி போங்க சார் என்று விட்டுவிட்டார். இத்துணைக்கும் அன்று பாண்டிதான் நன்றாக போட்டுவிட்டு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தான்.

இந்த இன்ஸ்பெக்டர் ஏதோ சினிமா இன்ஸ்பெக்டர் போல என்று நினைத்துக்கொண்டான்.

அவரிடம் எவ்வளவு வாதாடியும் மசியவில்லை, மேலும் வண்டியை  இங்கேயே விட்டுவிட்டு நாளை வந்து போதை தெளிந்தவுடன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சாவியை வாங்கி வைத்துக்கொண்டார்.

சதீஷும் பாண்டியும் அவரை நொந்தபடி வாடகை வண்டியில் வீடு வந்து சேரும்பொழுது காலை ஒன்பது மணியாகிவிட்டது. மனைவியும் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்விட்டனர். தன்னிடமுள்ள சாவியை வைத்து திறந்து படுக்கையில் விழுந்தான். கார் இல்லாமல்  பள்ளிக்கூடம் போகவும் தயக்கமாக இருந்தது. நன்றாக உறங்கிவிட்டான்.

மாலை மனைவியும் பிள்ளைகளும் வீட்டிற்கு வந்தனர்.

ஏங்க இவ்வளவு தூரம் சொல்லியும்  நேரத்திற்கு வரவில்லை, பொண்ணுங்க ரெண்டும் உங்க பேர்ல ரொம்ப கோவமா இருக்காங்க. நீங்க சீக்கிரமாகவே கிளம்பிட்டதாக பாண்டி சொன்னானே, ஏன் லேட்டு வழியில என்னாச்சு, கார் எங்கே என்று கேள்விமேல் கேள்வி கேட்டாள்.

வழியில ஒரு சின்ன ஆக்சிடெண்ட்,  அதான் காரை அங்கேயே விட்டுவிட்டு கால் டேக்சியில் வந்துவிட்டேன் என்றான். பாண்டி நாளை வண்டியை எடுத்து வருவான் என்றான்.

நல்ல காலம் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே, விடுங்க ரெஸ்ட் எடுங்க, அடுத்தவாரம் ஸ்கூலில் இன்னுமொரு விழா இருக்கு  என்றாள்.


Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! கதை நல்லாவே இருக்கு...

KILLERGEE Devakottai said...

கதையை ரசித்தேன் நண்பரே
தமிழ் மணம் 3

'பரிவை' சே.குமார் said...

கதை அருமை....
வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

பாவம்!அடுத்த வாரம் எப்படியோ!

Unknown said...

இந்த நல்ல காலம் ரொம்ப நாள் நீடிக்காது என்றே நினைக்கிறேன் :)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.