Thursday, 12 November 2015

கலக்கல் காக்டெயில்-173

கடலூருக்கு வந்த சோதனை

சில வருடங்களுக்கு முன்பு வந்த "தானே" புயல் கடலூரை புரட்டி போட்டு சென்றது. துண்டிக்கப்பட்ட மின்சாரம் வர கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு மேலானது. அந்த சமயமும் இதே அரசுதான் ஆட்சியில் இருந்தது. போர்க்கால நடவடிக்கை என்று சொல்லியே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்தான் கடலூர் இயல்பு நிலைக்கு திரும்பியது. இத்துணைக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த சமயத்தில் முதல் முறையாக சரியாக கணித்து இந்த இடத்தில்தான் புயல் கரையை கடக்கப் போகிறது என்று கணித்தது. இருந்தும் அரசு மெத்தனமாக இருந்து விட்டது.

தற்பொழுது அடித்த மழையில் மறுபடியும் கடலூர் அடிபட்டு இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மறுபடியும் உயிரழந்தவர்களுக்கு காசு என்று அறிவித்துவிட்டு மெத்தனம் காட்டுகிறது.

தவறுகளிலிருந்து இவர்கள் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இது ஆரம்பம்தான் இந்த வருடம் தமிழ் நாட்டில் வழக்கத்தை விட மழை  12 விழுக்காடு அதிகம் இருக்கும் என்று வானிலைமையம் சொல்லிக்கொண்டிருக்கிறது. மறுபடியும் ஒரு தாழ்வுமண்டலம் அந்தமான் அருகே நிலைகொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

அரசு உஷாராக இருக்குமா? பார்க்கலாம்.

நிதீஷ், லாலு, மோடி

நடந்து முடிந்த பீகார் தேர்தலில் நிதீஷ் லாலு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று பி.ஜே.பி க்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்த வெற்றி மத்தியில் ஆளும் கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவுதான். மோடியின் ஆணவத்திற்கு விழுந்த பெரிய அடி.

மதவாத கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட அந்த அடையாள அட்டையை நீக்க பி.ஜே.பி ஒன்றும் முயற்சி செய்வதாக தெரியவில்லை, மாறாக ஆமாம் நாங்க அப்படித்தான் என்று உறுதி செய்வதுபோல்தான் சமீபத்தில் அவர்கள் நடவடிக்கை உணர்த்துகின்றன.

கட்சியின் மூத்த உறுப்பினர்களே இப்பொழுது மோடி மீதும் அமீத்ஷா மீதும் கடுப்பில் உள்ளனர்.

பிரதமர் வழக்கம் போல வெளிநாடு போய்விட்டார். இவர்களும் மாறமாட்டார்கள்.

ரசித்த கவிதை

காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால்
அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது
ஃபீனிக்ஸின் இறகுகளைக் கேட்கலாமென்றால்
முழுவதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமென்று தெரிகிறது

சாதகப் பறவையை கேட்கலாமென்றால்
பெருமழை வேண்டிக் காத்துக்கிடக்கச் சொல்கிறது

அன்னப் பறவையை கேட்கலாமென்றால்
நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது

மானின் விழிகளைக் கேட்கலாமென்றால்
அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடக்கிறது

உன் மனதை  கேட்கலாமென்றால்
அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கறது.

..................................ராம்சின்னப்பயல்

வாவ்..............சின்னப்பயலின் கவிதைகளுக்கு நான் அடிமை.

ட்விட்டரில் படித்தது

அரசியல் போலதான் இணையமும் எப்பவும் எதிர்கட்சி கூச்சல் போடதான் செய்யும் நாம அம்மா மாதிரி எதயும் கண்டுக்காம தோன்றத செஞ்சிட்டு போய்டே இருக்கணும்


ஜொள்ளுFollow kummachi on Twitter

Post Comment

9 comments:

”தளிர் சுரேஷ்” said...

அரசு பாடம் படிக்காவிட்டால் மக்கள் தேர்தலில் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு போகிறார்கள்! மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி நிர்வாகம் சரியாக இருப்பதாக தோன்றவில்லை!

Thulasidharan V Thillaiakathu said...

அரசு?!! ஹாஹஹ்ஹ் இது வரை அரசு ரொம்ப நல்ல பாடம் கத்துக்கிடுச்சு..இனி கத்துக்கப் போகுது ?? அட போங்க கும்மாச்சி... நம்ம ஊரப் பத்தித் தெரியாதா...மத்தியில ஒரு வகையானகூத்துனா இங்க தமிழ்நாட்டுல வேற விதமா...நம்ம மக்களும் முட்டாளுங்கதான்...

மீரா செல்வக்குமார் said...

என்னதான் ஜொள்ளுங்க....மன்னிக்கவும் சொல்லுங்க.காக்டைல் னா காக்டைல் தான். அவ்வளவு ருசி...வருடம் தோறும் மழை வரத்தான் செய்கிறது...அது தானே வந்து போவதால் தான் போனமுறை தானே என பெயர் வைத்திருப்பார்களென நினைக்கிறேன்.இந்த பதிவுகளை பத்திரமாய் வையுங்கள்....மீள்பதிவுக்கு உதவும் .

KILLERGEE Devakottai said...

கவிதையை ரசித்தேன் நண்பரே
தமிழ் மணம் 2

திண்டுக்கல் தனபாலன் said...

மாறுவது சிரமம் தான்...

அருணா செல்வம் said...

நவம்பர் டிசம்பரானால் மழை, வெள்ளம் வரும்.
ஏப்ரல் மேயானால் வெயில், வறட்சி வரும் என்பது நம்ம மக்களுக்குத் தெரியாது போல.
அடுத்த வருடமும் இது போலதான் பேசுவோம் கும்மாச்சி அண்ணா.
கவிதை அருமை.

ராஜி said...

கடலூர் பாவம்தான். இத்தனை தண்ணியையும் சேமித்து வைக்க நமக்கு துப்பில்ல. நமக்கு அடுத்தவங்கக்கிட்ட சண்டைப் போட்டு இரந்து நின்னாதான் பிடிக்கும் போல!

சென்னை பித்தன் said...

காக்டெயிலில் சேர்க்கப்பட்ட சரக்குகள்,ஒவ்வொன்ரும் ஒரு விதம்!
அருமை

'பரிவை' சே.குமார் said...

அருமையான காக்டெயில்...
கடலூர் மழையில் கரைகிறது...
அதேதான் சென்னையிலும் என்று நினைக்கிறேன்...
பல்லாங்குழி சாலைகள் எல்லாம் பல்லை உடைப்பதாகக் கேள்வி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.