Sunday 6 December 2015

கண்டோம், கற்போம்

தமிழகத்தில் தற்போது பெய்த மழை எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக சென்னையும், கடலூரும்  நிலைகுலைந்து போயிருக்கிறது
.

வெளிநாடு வாழ் தமிழர்கள் கடந்த ஒரு வாரமாக தங்கள் சுற்றங்களின் நிலைமையை அறிய கொண்ட தொடர்புகள் முடிவுறாமல் நின்றன. டிசம்பர் ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைக்கட்சியில் கண்ட காட்சிகள் பயத்தைக் கூட்டின.  அவ்வப்பொழுது ஏற்பட்ட அரை குறை தொடர்புகள் மனதில் மேலும் கவலையூட்டின.


சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரசாங்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் ஓரளவு சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுத்திருக்கலாம்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் சென்னையை வெகுவாக பாதிக்கும் என்று "தானே புயல் முன்னறிவிப்பு" போல் வெகு சரியாக கணித்தது. அரசாங்கம் அப்போதும் விழித்துக்கொள்ளவில்லை. அவர்களது தொலைக்காட்சி இருக்குமிடத்தை பாதுகாத்ததில் ஒரு பங்கை மற்ற இடங்களுக்கு செய்திருந்தால்கூட பேராபத்தை தவிர்த்திருக்கலாம்.

ஏரிகள் நிரம்ப ஆரம்பித்தவுடன் மதகுகள் திறப்பதை முன்கூட்டியே அறிவித்து ஆறுகளின் அருகில் இருப்பவர்களை வெளியேற்றி இருக்கலாம். செம்பரம்பாக்கத்திலிருந்து வினாடிக்கு இருபத்தி ஐந்தாயிரம் கன அடி திறக்கப் போகிறோம் என்று வந்த அறிவிப்பு காலம் கடந்த ஒன்று. அவர்கள் அறிவித்த பொழுது அடையாரில் திறந்து விடப்பட்ட அளவு அதைவிட அதிகம். அதைவிட கொடுமை அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு அது எண்பதாயிரம் கன அடியாக ஏறியது.

சென்னையில் முக்கால்வாசி இடங்களில் தண்ணீர் ஆறடிக்கும் மேலாக உயர்ந்தது. தி. நகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஆறடிக்கும் மேலாக ஓடியது. அதில் இருசக்கர வாகனங்கள், கார்கள், இறந்த ஆடு மாடுகள் அடித்து செல்வதை பார்த்தவர்கள் அதிகம். நந்தனத்தில் இரவு பகலாக விழித்திருந்து உதவியர்கள் அவை வடிகால்களில் இழுத்து செல்லப்பட்டதை தொலைக்கட்சியில் கூறிக்கொண்டிருந்தனர்.

ஒரு தொலைக்காட்சி நிருபர் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மேற்பார்வையிட வந்த சென்னை மேயரிடம் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்க அவர் அமைச்சரிடம் அனுப்பினார், அந்த அமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் ஆணைப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லிகொண்டிருக்கும் பின்னணியில் ஒரு வீட்டின் மேற்கூரையில் நின்று கொண்டிருந்த பத்து இருபது பேர் தங்களை காப்பாற்ற வேண்டி கையசைத்துக் கொண்டிருந்தனர். மற்றொரு அமைச்சரோ மைக்கை தட்டி விட்டு பேட்டி என்றவுடன் அறை சேலை அவிழ்ந்து விழ தலை தெறிக்க ஓடினார். இந்த கழிசடைகள்தான் ஊழல் வழக்கில் தங்கள் தலைவி சிறை சென்றவுடன் ஒப்பாரி வைத்து அழுதனர். மற்ற அரசியல் வாதிகள் இந்த நிலைமையை வைத்து குளிர் காய்கின்றனர்.

இந்த வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களை கற்று தந்து வங்காள விரிகுடா நோக்கி சென்றிருக்கிறது. திரும்பவும் அங்கிருந்தே வரும் நாம் கற்றோமா? என்று மதிப்பிட.

சென்னையில் இருந்த கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் வெறும் முப்பதாக குறைந்தது நம்மை இது வரை ஆண்டவர்கள் செய்த திருக்கோலம்.

சென்னை வாசிகள் இந்த இடர்பாடில் சிக்கித்தவித்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மனித நேயத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். அடுத்த வீட்டு நபர் யாரென்று தெரியாதவர் இப்பொழுது நட்பு பாராட்டுகின்றனர்.

இந்த வெள்ளம் சென்னையில் உள்ளவர்களின் பொருட்களையும் சில உயிர்களை மற்றும் அடித்து அழித்து செல்லவில்லை. நம்மிடம் உள்ள ஜாதி மத பேதங்களையும் அடித்து சென்றிருக்கிறது. பாதித்தவர்களுக்கு உதவி செய்தவர்கள் ஜாதியோ மதமோ அல்லது எந்த எதிர்பார்போ இல்லாமல் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சென்னை இளைஞர்கள் தங்களை உயிரை பணயம் வைத்து என்னற்றவர்களை காப்பாற்றி இருப்பதை காண நேர்ந்தது.

அரசியல்வாதிகள் வழக்கம்போல தங்கள் அல்ப விளம்பர குணங்களை இந்த நேரத்திலும் காட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் திருந்தமாட்டார்கள்.

நாம்தான் புரிந்துகொண்டிருக்கிறோம்.

இனி ஒரு விதி செய்வோம்
அதை தேர்தலில் காப்போம்
ஒட்டு பொறுக்கி கூட்டத்தை
நாட்டை விட்டு அகற்றுவோம்.Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

KILLERGEE Devakottai said...

மனிதநேயம் இன்னும் கொஞ்சம் உயிப்புடன் இருக்கின்றது நண்பரே..
தமிழ் மணம் 1

அன்பே சிவம் said...

உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
சில வேண்டுதல்கள்...

இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
நிறையவே நாம் ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டிய தருணம் இது...

அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
வேண்டுதல்கள்..

1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

மீரா செல்வக்குமார் said...

இனி ஒரு விதி செய்வோம்
அதை தேர்தலில் காப்போம்
ஒட்டு பொறுக்கி கூட்டத்தை
நாட்டை விட்டு அகற்றுவோம்.///நடக்கும்....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.