Thursday 24 September 2009

அக்யுஸ்ட் (Accused)......


வீட்டின் பின்புறத்தில் ஏதோ சலசலப்பு கேட்கவே, எழுந்து, அறையின் கதவைத் திறந்து வெளியே உள்ள மொட்டை மாடியின் விளக்கை போட்டேன். சலசலப்பு அடங்கியது. வானம் இருட்டி லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ஏதும் ஆளரவம் தெரியவில்லை. மறுபடியும் அறையின் உள்ளே வந்துப் படுத்தேன். மனைவி தூக்கதிலிருந்து முழித்து, “மணியென்ன” என்றாள். “நாலரை இருக்கும் என்றேன்”.

“என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டீர்கள்” என்றாள்.

“இல்லை தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது என்னவென்று பார்த்தேன்” என்றேன்.
எங்கள் வீட்டில் திருட்டு அடிக்கடி நடப்பதுண்டு. வீடு ரயில்வே ட்ரக்கை ஒட்டி இருந்தது. ட்ரக்கின் அப்பால் ஒரு முப்பது குடிசைகள், கட்சிகொடிகளுடன் புதியாதாக வரதொடங்கியிருந்தது. என் வீட்டின் பின்புறம் “கம்பௌந்து” சுவர் இருந்தாலும் ஏறிக்குதித்து, கொடியில் காயபோட்டிருக்கும் துணிகள், பாத்ரூம் புக்கெட், டூத்ப்ருஷ் எதையும் வெளியில் வைக்க முடியாது.

வீட்டின் பின் புறமிருந்த இரண்டு தென்னை மரங்களும் வளைந்து சுவர் வெளியே இருப்பதால் மரத்தின் மேல் ஏறி உள்ளே குதித்து விடுவார்கள். சுவரின் மேல் முள் வேலி வேயந்திருந்தேன், ஆதலால் சுவர் ஏறி குதிப்பது கடினம். பொருட்களை எடுத்துக்கொண்டு மரத்தின் மேல் ஏறி அப்பால் குதித்து "எஸ்" ஆகிவிடுவார்கள்.

அன்று நான் காலையில் எப்பொழுதும் போல் பாக்டரி போகத் தயாராகிக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் ஒரே கூட்டம். அப்பாலிருந்த குடியிருப்பு ஆட்கள் ஆண்களும் பெண்களுமாகக் கூடி, என்னை வெளியே வரச்சொல்லி சத்தம் போட்டார்கள். காலையில் ஒரு ஆள் ரயில்வே ட்ரக்கின் ஓரமாக தலையில் காயத்துடன் இறந்து விட்டதாகவும், அவனை நான் கல்லால் அடித்துக் கொன்று விட்டேன் என்றும் கூச்சலிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு ஒரு கரப்பான் பூச்சியைக் கொல்லக் கூடத் தைரியம் கிடையாது.

அவர்கள் சிறிது நேரம் கூப்பாடு போட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்.
எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. ஆளரவம் அடங்கியப் பின்பு நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டஷனுக்கு சென்றேன்.
சப் இன்ஸ்பெக்டர் தான் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.
நான் சற்றும் எதிர்பாராமல் அவர், "இன்னா சார் அந்த ஆளை கல்லாலே அடிச்சு கொன்னுட்டு இப்போ நீயே கம்ப்ளைன்ட் குடுக்கிறியா, நாங்க எப்பவோ எப் ஐ ஆர் போட்டாச்சு" பிறகு அருகிலிருந்த ரைட்டரைக் கூப்பிட்டு, "காலையிலே எப் ஐ ஆர் போட்டோமில்லே, தொ இவர் தான் "அக்யுஸ்ட்", இவர்கிட்டே ஒரு கையெழுத்து வாங்கிக்கோ" என்றார்.

“சார் நான் கல்லால் எல்லாம் அடிக்கலே எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காலையில் ட்ரக் பக்கம் எதோ சத்தம் கேட்குது என்று எழுந்து விளக்கைப் போட்டேன். வேறொன்னும் செய்யவில்லை” என்றேன்.

“இன்னது விளகாலேப் போட்டு தள்ளிட்டியா, எப்பா ரைட்டேர் அக்யுஸ்ட் ஒத்துகினார்பா, எழுதிக்கோ குத்து விளக்குலே அடிசிட்டராம்பா” என்றார். நான் இந்த எஸ் ஐயிடம் பேசுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று வீடு திரும்பினேன்.

பிறகு நான் அன்று பாக்டரிக்கு லீவ் போட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து வாசலில் ஆளரவம் கேட்கவே, வெளியே சென்றால். ஒரு நாலைந்து ஆட்களும், ஒரு பெண் தன கைக்குழந்தையுடன் அழுதுக் கொண்டு அவர்களுடன் இருந்தாள்.

அந்தக் கூட்டத்தில் நடு நாயகமாக இருந்த ஒருவன், சற்றே கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து, "இன்னா சார் அநியாயமா அந்த ஆளை கொன்னுட்டியே, பாரு என்ன சினா வயசுப் பாரு இந்தப் பொண்ணு, இது இப்போ வயத்து பொழைப்புக்கு இன்னா செய்யும், நாம அல்லாத்தையும் செட்டில் செய்யலாம், வா என்று என்னை சற்றுத் தள்ளி அழைத்து, நீ இன்னா பண்றே சார் ஒரு மூணு லட்சம் குடுத்திரு, நா அந்தப் பொன்னே கேசே வாபுஸ் வாங்கச் சொல்றேன்" என்றான்.

"யோவ் நான் என்ன செய்தேன், எதுக்கு மூணு லட்சம், சும்மா இங்கே கலாட்டப் பண்ணாதே", என்றேன்.

......த்தா அவ்வளவு முறைப்பகீரியா, கொலைப் பண்ணிட்டு, மவனே போ போயீ களி துன்னுடா. என்று எங்கள் வீட்டின் முன்னே இரண்டு அரை செங்கலை வீசிவிட்டு சென்றான்.
எனக்கு இப்பொழுது பயம் தொற்றிக்கொண்டது. இவர்கள் இது போல் தினமும் வீட்டின் முன்பு வந்து கலாட்டா செய்யப் போகிறார்களே என்றும், மேலும் நான் இல்லாதப் பொழுது மனைவியும் குழந்தைகளும் தனியாக இருக்கும் பொழுது எதாவது செய்து விடுவார்களோ என்று.

ஆதலால் கமிஷனர் ஆபீஸில் வேலை செய்யும் என் நண்பனை கண்டு விவரத்தை சொல்லாலாம் என்று சென்றேன்.

அவன் விஷயத்தை கேட்டு என்னை அசிச்டனட் கமிஷனரை பார்க்கக் கூட்டிச் சென்றான்.
நான் அவரிடம் அன்று நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னேன். பொறுமையாக என் பேச்சைக் கேட்டார், பிறகு யாரையோ அழைத்து எங்கள் ஏரியா எஸ் ஐ யாரென்று கேட்டார், முத்துப்பாண்டி என்று பெயர் சொன்னார்கள்.

பிறகு அவர் என்னிடம் நீங்கள் கவலைப் படாதீர்கள் நான் பார்த்து கொள்கிறேன், யார் பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். உங்களை எப்பொழுது வேணாலும் நான் கூப்பிடுவேன் வரவேண்டியிருக்கும் என்றார்.

நிச்சயமாக வருகிறேன் சார் என்றேன்.

வீட்டுக்கு வந்தால் வீட்டில் எனக்காக எஸ் ஐ முத்துபாண்டி காத்துக் கொண்டிருந்தார்.
“சார் நான் அல்லாத்தையும் விசாரிச்சுட்டேன், என்கிட்டே உண்மையே சொல்லு, தொ பார் நேத்துக் கூட ஒரு கொலை கேசு, நாமாண்ட வந்துச்சு, உண்மையே ஒத்துகினான், அவனே நான் காப்பாத்திட்டேன், தொ பார் இப்போ எட்டாம் நம்பர் கடையாண்ட தண்ணி அடிச்சுகின்னு கிரான்”.

“அந்தக் குப்பத்து ஆளோட வச்சுக்காதே, அவனுங்க ரொம்ப மோசமானவனுங்க. பொலிடிகல் சப்போர்ட் வேறே கீது. நம்மலாண்டே வா உனக்கு அல்லாம் முடிச்சு கொடுக்கிறேன், ஒரு அம்பதாயிரம் கொடு. அல்லாம் சுளுவா முடிஞ்சிரும் இன்னா” என்றார்.
“சார் என் கிட்டே பைசா பேராது, நான் ஒன்றும் செய்யவில்லை, மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

“தோ பார் சார் நீ எங்கே போனாலும் ஒன்னாலே ஒன்னும் பண்ண முடியாது, நல்ல வழி சொல்றேன் காசுக்கு பாக்காதே, அப்புறம் உன் தலை எயுத்து, நா இன்னா சொல்ல” என்று சென்று விட்டார்.

ஒரு வாரம் கழித்து என்னை நண்பன் கமிஷனர் ஆபிசுக்கு வர சொன்னான்.
மறுபடியும் நான் ஏசியை சந்தித்தபொழுது, அவர் என்ன நடந்தது என்று கேட்டார். நான் எஸ். ஐ. வந்த விஷயத்தை அவரிடம் சொல்லவில்லை.

அவர் இந்த கேஸ் ஓபன் அண்ட் ஷட் கேஸ். அவன் அந்த மரத்தின் மேல் ஏற முயற்சித்து, கீழே விழும் பொழுது, கல்லில் மண்டை அடிபட்டு இறந்திருக்கிறான். இந்த கேஸ் நீங்கள் சென்ற போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகவில்லை. ரயில்வே ஏரியா என்பதால், "ஆர்பிஎபில்" பதிவாகியிருந்தது.

இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது,

நன்றி சார் என்று நான் கிளம்புமுன், நீங்க யாருக்கும் பணம் எதுவும் குடுக்கலியே என்றார்.

இல்லை சார் என்றேன்.

“குட், உங்கள் தெளிவான சிந்தனையும், தைரியமும்(??) உங்களை அனாவசிய பிரச்சனையிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. நீங்க ஒரு முறை பயந்து, பணம் குடுத்தீர்கள் என்றால், இதற்கெல்லாம் முடிவில்லை” என்றார்.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் விஷயத்தை சொன்னேன்.
பின்பு வீட்டின் பின்புறம் சென்றேன், அங்கு அந்த இறந்தவனின் மனைவி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

மனைவியிடம் கோபமாக வந்து, “இவளை ஏன் வீட்டுக்குள் விட்டாய், மறுபடியும் ஏதாவது பிரச்சினை வரப் போகிறது” என்றேன்.

"பாவம் அவள் என்ன செய்வாள், கணவன் இறந்தவுடன் அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தொந்தரவு செய்கிறார்களாம். இவளை வைத்து காசு சம்பாதிக்கப் பார்கிறார்களாம். என்னிடம் வந்து அழுதாள், நான் தான் அவளை இங்கு வேலைக்கு வைத்து, தோட்டத்தில் உள்ள லும்பர் ரூமில் தங்கச் சொல்லியிருக்கிறேன், பிரச்சினை என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

vasu balaji said...

தப்பிச்சீங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு பயம் கலந்த நிலை இடுகை முழுதும் இருந்தது.. ஆனால் கடைசி பத்தியில் நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்

ஆரூரன் விசுவநாதன் said...

பாதகம் செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ள லாகாது பாப்பா....
மோதி மிதித்துவிடு பாப்பா...அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா....

என்று யாரோ நேற்று பேசிக்கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது.


தவறு செய்பவர்களைப் பற்றி வெளிப்படையாக பெயருடன் எழுதும் முயற்சி நன்று. அனைவரும் இதை பின்பற்றினாலாவது இவர்கள் திருந்துவார்களா?

அன்புடன்
ஆரூரன்

VISA said...

good writing. good story. keep going.

அங்கிள் சென்...... said...

முதல்ல ரெண்டு நாய் வாங்குங்க!!!

sarathy said...

Matindingala??? Thapchingalaa?. Nallave irunthathu.
=sarathysp

ஹேமா said...

கும்மாச்சி, மனதில் திகிலோடு கதையின் ஓட்டமும் முடித்த விதமும் பாராட்டுக்குரியது.வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

பின்னூட்டமிட்டு ஊக்கம் அளிக்கும் அனைவருக்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.