Sunday 11 October 2015

ஜில் ஜில் ரமாமணி

ஆச்சி என்று எல்லோராலும் அறியப்பட்ட மனோரமா நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு தமிழ் திரையுலகம் தவித்து நிற்கிறது. தனது பன்னிரெண்டாவது வயதில் நடிப்பைத்தொடங்கி, பல மேடை நாடகங்கள், ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என்று சாதித்தவை இனி எந்த நடிகை, நடிகராலும் செய்ய முடியாத சாதனை.


இன்று அவருக்கு செய்யப்பட்ட இறுதி மரியாதை, வழியெங்கிலும் கூடிய கூட்டம் அவரது நடிப்பாற்றலுக்கு கிடைத்த மரியாதை என்று சொன்னால் அது மிகையாகாது. நகைச்சுவை, குணசித்திரம் என்று எந்த பாத்திரம் கொடுத்தாலும் அவரது பாணி மற்ற சக நடிகர்களுக்கு சவாலாகவே இருக்கும். நடிகர் திலகமே அவருடன் நடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் தனது குடும்பத்தினரிடம் இன்று "எதிர்த்த வீட்டுக்காரி" அசத்திவிட்டாள் என்று சொல்லுவாராம்.

தில்லானா மோகனாம்பாளில்  சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணி’ என்ற பாத்திரத்தில் வெளுத்துக் கட்டினார் மனோரமா. ‘அந்த மோகனாங்கி ஆடுறாகளாமே.. அவுகள பாக்க ஆளுக வந்தா.. நான் ஆடுறத பாக்க வரமாட்டாகளா?” என்று வட்டார வழக்கில் மனோரமா பேசியதும், சிவாஜியும் அவரும் கலாய்க்கும் காட்சிகளும் காலங்கடந்தும் நெஞ்சில் நிறைந்திருப்பவை. தமிழுக்கு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகையைத் தந்தது ‘ஜில் ஜில் ரமாமணி’ கதாபாத்திரம். நடிப்பைப் போலவே பாட்டிலும் அவரது தனித்துவம் வெளிப்பட்டது.

தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணி அவரைத்தவிர வேறு யாராலும் செய்யமுடியாத ஒன்று. மனோரமா என்றாலே அந்த கதாபாத்திரம் நம் உள்ளே தோன்றுவது இயல்பு. தனது நாடக கொட்டாயிற்கு வந்திருக்கும் சிக்கல் சண்முக சுந்தரத்திடம் நாதஸ்வரத்தைக் கொடுத்து அவரை வாசிக்க சொல்லும் காட்சியில் அவர் நடிகர் திலகத்தையே மிஞ்சியது போல் தோன்றும் அசத்தலான நடிப்பு.

இந்தியனில் ஒரு சராசரி ஏழையாக வந்து, தாலுக்கா ஆபீசில் லஞ்சம் கேட்பதை புலம்பும் காட்சி, சின்ன வேடமானாலும் அதை அவர் செய்யும் திறன் அபாரம். சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் சம்பத், உன்னால் முடியும் தம்பி, பாரத விலாஸ்  போன்ற படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு மறக்க முடியாதது.

எழுபதுகளில் வா வாத்தியாரே ஊட்டாண்ட பாடல் ரொம்ப பிரசித்தம். "மெட்ராச சுத்திப்பாக்கப்போறேன் மெரினாவில் சுண்டல் வாங்கித்தாரேன்" என்று ஏ. ஆர் ரஹ்மான் இசையில் பாடியது நம்மிடம் எப்பொழுதும் ஒலிக்கும்.

சொந்த வாழ்க்கையில் சோகம் அப்பியிருந்தாலும் நகைச்சுவையிலே நம்மை மூழ்க அடித்த "ஜில் ஜில்" சொர்கத்தை மகிழ்விக்கப் போயிருக்கிறது. நகைச்சுவை என்ற சொல் இருக்கும் வரை ஆச்சியின் புகழ் இருக்கும்.

அவரது ஆன்மா சந்தி அடைய வேண்டுவோம்.




Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

KILLERGEE Devakottai said...

அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
த.ம. 1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அவரின் ஆன்மாசாந்தியடையட்டும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

செய்தி அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது! திறமையான பெண்மணி! சிறந்த நடிகை! ஆழ்ந்த இரங்கல்கள்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.