Thursday 9 February 2012

வழி தெரியவில்லை ------------சுஜாதா


சில வித்தியாசங்கள் என்ற சிறுகதை தொகுப்பில் படித்தது. கதையை விறுவிறு என்று ஆரம்பித்து பில்ட் அப் கொடுத்துவிட்டு சரேல் என்று முடித்துவிடுவது அவரது தனித்தன்மை.

இதோ கதை

ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரெயில் மார்க்கத்தில் பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம் சென்னையில் தப்பவிட்ட படம். ஊரெல்லாம் சளைக்காமல் ஓடி ஓய்ந்து விட்டு மொஃபெசலில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நல்ல படம் என்று நண்பர்கள் வற்புறுத்தி பார்க்கச் சொன்னார்கள்.

அதை துரத்திக் கொண்டு அந்த ரெயில் நிலையத்தில் மாலை இறங்கினேன். பெயர் சொல்ல மாட்டேன். நண்பர்கள் வழி சொல்லி இருந்தார்கள். லைனோடு நட, லெவல் கிராசிங்கில் சக்கடையைத் தாண்டு. பஞ்சாயத்து அலுவலத்தில் திரும்பி, நேராக நட, கடைத்தெருவேல்லாம் தாண்டினால் ஒரு சென்ட் கம்பனி வரும். வாசனை அடிக்கும். அங்கே இடது பக்கம் திரும்பிக் கல்லெறிகிற தூரம் நடந்தால் நெல் வயல் வரும். அதற்கு முன் கொட்டகை தென்பட்டு விடும் என்று.

தென்பட்டது.

தென்னங்கீற்று- சிங்கள் ப்ரொஜெக்டர்- சோடா கலர்- கைமுறுக்(கு) கொட்டகை, டிக்கட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தேன். ஒரு நாய் காலடியில் ஓடியது, கொசு காதடியில் பாடியது. காஞ்சனா ஈஸ்ட்மேன் கலரில் சிரித்..........

ஆனால் இந்தக் கதை சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்கு திரும்பியபொது எனக்கு ;ஏற்பட்ட வினோத அனுபவத்தைப் பற்றியது. படம் நீளமான படம். முடிந்து திரும்பும்போது  எனக்கு நல்ல பசி. கடைசி ரெயிலை தவறவிடப் போகிறேன என்கிற கவலை மாம்பலத்துக்குப் போய்ச் சப்பாத்தி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று வேகமாக நடந்தேன்.

வந்த வழி ஞாபகம் இருந்தது. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இரவில் இருள் காரணமோ அந்தத் தெருக்களின் பின்னல் காரணமோ வழி தவறி விட்டேன். போகிறேன்...போகிறேன் .........ஸ்டேஷனைக் காணோம்.

நான் கவலைப்பட ஆரம்பித்தேன். ஏதோ ஒரு கடைத்தெருவுக்கு வந்துவிட்டேன். அது நான் மாலையில் நடந்த கடைத்தெரு போல இல்லை. அப்பொழுதுதான் நான் தனியாக இலக்கில்லாமல் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். கடைகள் மூடி இருந்தன. ஹோட்டல்களில் நாற்காலிகள் மேஜைமேல் கவிழ்ந்து இருந்தன. வெளியே பலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.  

வழி கேட்பதற்கு எங்கும் தென்படவில்லை. தனியாக வந்தது தப்பு. என் நடை தயங்கியது சற்று வியர்த்தது.

நல்லவேளை எதிரில் ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் தென்பட்டான். அவன் தூரத்திலிருந் சாலையின் சரிவில் இயல்பாக  பெடல் செய்யாமல் ஒரு சினிமா  பாட்டு பாடிக்கொண்டு வருவது தெரிந்தது. அவனை நிறுத்தி ஸ்டேஷனுக்கு வழி கேட்டேன். ரிக்ஷாவையும் பாட்டையும் நிறுத்தினான்.

“ஸ்டேஷனுக்கா?” என்றான் ஆச்சர்யத்துடன். இளைஞன் தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் என்னைப் பூராவும் பார்த்தான். அவன் பார்த்த பார்வையை என்னால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

“ஸ்டேஷனுக்கு போகறதுக்கு இங்கே வந்தியா?” என்றான்.
“ஏன்?”
“வழி தப்பு”
“வழி எது?” என்றேன்.
“நேராப் போ லெஃப்ட்லே ஓடி. ஆனா உனக்கு ஜாஸ்தி டயமில்லையே, மணி என்ன இப்ப?”
சொன்னேன்.
“கடைசி வண்டி போயிடுமே? உன்னால் நடந்து போக முடியாது. வா, நான் குறுக்கு வழியிலே போறேன். ஏறு. 12 அணா கொடு ஒரே மிறியா மிறிக்கிறேன்.”

பன்னிரண்டு அணா என்ன பன்னிரண்டு ருபாய் கொடுக்க தயாராய் ஏறிக்கொண்டேன். அவன் மிறித்தான். சைக்கிள் ரிக்ஷாவை ஒடித்துத்  திருப்பி நான் எந்த வழி வந்தேனோ அந்த வழியாகச் செலுத்தினான். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

“இப்படியா போகணும் என்றேன்?”

“அ ஆ” என்றான். அவன் செய்த சத்தத்தை ஏறக்குறைய அப்படித்தான் எழுத முடியும்.

கடைத் தெருவிலிருந்து விலகி நேராக ஒரு சந்தில் சரிந்தான். சந்தில் இருட்டாக இருந்தது. தன் சினிமா பாட்டைத் தொடர்ந்தான். மெட்டு மட்டும்தான். வார்த்தைகளுக்கு பதில் தந்தானே தாலே........பாட்டை நிறுத்திவிட்டான் கேட்டான்: “அவசரமாப் போகனுமா?”
“ஆமாம்” என்றேன் “ஏன்?”
“இல்லை சும்மா கேட்டேன்” மறுபடி ‘தந்தானே தாலே’
ஏன் பயம் சற்று அதிகமாகியது.
ரிக்ஷா சென்று கொண்டிருந்தது. மறுபடி ஒரு சந்தில் ஒடித்தது.

ஏன் பயப்படுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது தெரியாததால், இருட்டால், அந்த பாழாய்ப் போகிற பாட்டால்.

என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசித்தேன். ரூ.முப்பதோ என்னவோ, ஆனால் ரிஸ்ட் வாட்ச், மோதிரம்.

அவன் என்னை எங்கு அழைத்துச் செல்கிறான்?

சற்று நேரத்தில் எனக்கு தெரிய வந்தது.  ஒரு வீட்டின் எதிரே ரிக்ஷாவைவை நிறுத்தினான். இறங்கி விட்டான். ரிக்ஷாவின் முன் பக்கத்தில் விளக்கை ஊதி அணைத்தான். “இரு வரேன்” என்று சொல்லிவிட்டு அந்த வீட்டின் கதவை மெதுவாகத் தட்டினான். தட்டின தினுசில் ஒரு சந்தேகம் இருப்பதாக எனக்குப்பட்டது.

அவன் மெதுவாக “சொர்ணம்” என்று கூப்பிட்டது கேட்டது.
உள்ளே இருந்து “யாரு” என்று கேட்டது.

பெண் குரல்.

“நான்தான் கோபாலு”

சலங்கை சத்தம் கேட்டது. இல்லை, அது வளையல் சப்தம். கண்ணாடி வளையல்கள்.

கதவு திறந்தது. எண்ணெய் போடாத கதவு. கையில் அரிக்கேன் விளக்குடன் அந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள். சுமார் இருபது வயதிருக்கும். பெரிய வட்டமாக கருப்பில் பொட்டு, தூக்கத்தில் கலைந்த உடை.

“வந்துட்டியா நான் ரொம்ப.......” என்னைப் பார்த்து விட்டாள். அவள் குரலை உடனே தாழ்த்திக் கொண்டாள். என்னவோ அவனைக் கேட்டாள்.

கதவு பாதி திறந்திருந்தது. அவள் என்னிடம் “வாங்க” என்றாள்.

“என்னப்பா?” என்றேன், சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த நான். எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை. தொண்டை அடைத்திருந்தது.

“சும்மா போ! அட” என்றான்.

அந்த ரிக்ஷாவில் ஏறிகொண்டதிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லாவற்றிலும்- ஏன், அதற்கு முன் நான் சினிமா பார்க்கத் தனிய வந்ததில் கூட- ஏதோ ஒரு தவிர்க்க முடியாத தன்மை இருந்ததாக எனக்குப்பட்டது. என்னதான் நடக்கப்போகிறது பார்த்துவிடலாமே என்று நான் துணிந்திருக்கலாம்.

நான் அவள் பின் அந்த வீட்டுக்குள் சென்றேன்.

அந்தப் பாதி  திறந்த கதவைக் கடந்ததும் உள்ளே நீண்ட ஒரு வழி நடை தென்பட்டது. அதன் இறுதியில்  இருந்த கதவை நோக்கி அவள் சென்றாள்.

கதவை அடைந்து, கதவைத் திறக்காமல் எனக்காகக் காத்திருந்தாள் அவள். நான் சற்று தூரத்தில் தயங்கினேன்.

“வாங்க” என்றாள் பொறுமையில்லாமல்.

சென்றேன்.

நான் வரும் வரை காத்திருந்து சரேல் என்று அத்தக கதவை திறந்தாள்.

என் மேல் குளிர்ந்த கற்று வீசியது.

“அதோ பார், அதான் ஸ்டேஷன். போ” என்றாள்.

-----------------------சுஜாதா


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

குடந்தை அன்புமணி said...

கதை எப்படியோ ஆரம்பித்து சூப்பராக முடித்திருக்கிறாருங்கோ...

சமுத்ரா said...

நல்ல கதை

ஹேமா said...

வித்தியாசமான திருப்பம் கதையில்.அருமை !

Rathnavel Natarajan said...

ஏற்கனவே படித்திருக்கிறேன்.
நல்ல கதை.
நன்றி.

Katz said...

good one.

Advocate P.R.Jayarajan said...

//பெண்கள் நைட்டியில் வருவது உரிமையாக இருக்கலாம், எங்காவது தையல் விட்டிருக்கிறதா என சோதித்தபின் வரவேண்டியது கடமை.#கொடுமை.-------அரட்டை கேர்ள்.//

நைட்டி

அதிகாலை
பால்காரர்கள்
அதிர்ஷ்டசாலிகள்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.